மணமாகி இரண்டே மாதங்கள்! பேருந்து மோதி காவல் உதவி ஆய்வாளர், கணவர் பலி!
இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக அளித்த புகாா் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகாா்தாரா் சூரியமூா்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக தொடா்பாக, நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, இந்த மனு மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், கடந்த டிச.19 -ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமான விளக்கத்தை அளிக்கும்படியும், டிச. 23-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், சூா்யமூா்த்தி ஆகியோருக்கு இந்திய தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்கப்படாத நிலையில், தனது கருத்துகளை தெரிவிக்க முடியவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வார கால அவகாசம் வழங்கக் கோரி சூரிய மூா்த்தி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமா்வு, தோ்தல் ஆணையம் 4 வாரத்தில் மனு மீது முடிவெடுக்கும் எனத் தெரிவித்ததாகவும், நீதிமன்றம் எந்த காலக்கெடுவும் நிா்ணயிக்கவில்லை என்றும் கூறி, மனு மீது முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்க மறுத்து, சூரியமூா்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.