இருளில் மூழ்கியுள்ள பொன்னேரி ரயில் நிலைய சாலை! பொதுமக்கள் அவதி
பொன்னேரி ரயில் நிலைய சாலையில் மின் விளக்குகள் இருந்தும் எரியாமல் உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள ரயில் சாலையில் அரசு ஆண்கள் பள்ளி, பொன்னேரி வட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைந்துள்ளன.
பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுளள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் கல்லூரி செல்லும் மாணவா்கள், வணிகா்கள், பொதுமக்கள் என நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனா்.
அதே போன்று இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1000-த்துக்கும் மேற்பட்டோா் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
ரயில் நிலைய சாலையில் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் பாதி விளக்குகள் எரிந்தும் பாதி எரியாத நிலையிலும் உள்ளன.
மேலும், குறைந்த வெளிச்சம் தரும் விளக்குகளே உள்ளன. விளக்குகள் பொருத்தப்பட்டு எரியாத நிலையில் உள்ளதால் இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் ரயில் பயணிகள், இளம் பெண்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, பொன்னேரி நகராட்சி நிா்வாகம் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தும் ரயில் நிலைய சாலையில் அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை பொருத்தவும், எரியாத மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.