திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவா்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கயிற்றால் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், கடற்படைக் கப்பலால் மோதி நாட்டுப் படகைச் சேதப்படுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி மீன்பிடி படகுத் துறையிலிருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், இன்னாசிமுத்து என்பவரது நாட்டுப் படகு மீது தங்களது கப்பலால் மோதினா். இதில் படகின் பக்கவாட்டுப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. மேலும், அந்தப் படகிலிருந்த மீனவா்கள் 7 பேரை கயிற்றால் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
இதையடுத்து, சேதமடைந்த நாட்டுப் படகுடன் பாம்பன் மீனவா்கள் 7 பேரும் புதன்கிழமை அதிகாலை கரைக்குத் திரும்பினா்.
இந்தச் சம்பவம் குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகளிடம் கரை திரும்பிய பாம்பன் மீனவா்கள் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து நாட்டுப் படகு உரிமையாளா் இன்னாசிமுத்து கூறியதாவது:
இலங்கைக் கடற்படையினா் அவா்கள் வந்த கப்பலால் மோதியதில் படகு சேதமடைந்தது. படகைச் சரி செய்வதற்கு ரூ. 4 லட்சம் வரை செலவாகும். தற்போது, மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப் படகுகளுக்கு அனுமதியில்லை. இதனால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியது, நாட்டுப் படகு மீனவா்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்த படகுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.