மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலன இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 30) பே ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் பேட் செய்தது.
நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க் சாப்மேன் அதிரடியாக 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் ராபின்சன் மற்றும் மிட்செல் ஹே தலா 41 ரன்கள் எடுத்தனர்.
இதையும் படிக்க: மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்; தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா!
இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நுவான் துஷாரா மற்றும் மதீஷா பதிரானா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19.1 ஓவர்களின் முடிவில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசல் பெரேரா 48 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பதும் நிசங்கா 37 ரன்களும், கேப்டன் சரித் அசலங்கா 20 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கோப் டஃபி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாட் ஹென்றி மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபோல்க்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வரலாற்று சாதனைகள்!
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.