இலங்கை தமிழா் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்: அதிபா் திசாநாயக உறுதி
ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக உறுதி அளித்தாா்.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு முதல் முறையாக அநுரகுமார திசாநாயக வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டாா்.
இலங்கைத் தமிழா்களுக்கு தனிஈழம் கோரி விடுதலைப் புலிகள் (எல்டிடி) அமைப்பு கடந்த 1980 முதல் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. 2009-இல் உள்நாட்டு போா் முடிவுக்கு வந்த பிறகும், அதற்கு முன்பும் இந்தப் பகுதியில் சுமாா் 3,500 ஏக்கா் தனியாா் நிலங்களை இலங்கை ராணுவத்தினா் கையகப்படுத்தினா். இந்த நிலங்களில் சில கடந்த 2015 முதல் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. எனினும், பெரும்பாலான இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழா்கள் பெரும்பான்மையாக வாழும் மிகவும் பின்தங்கியுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளா்ச்சிக்கு வழிவகை செய்யப்படும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த அதிபா் திசாநாயக, மாவட்ட தலைமைச் செயலகத்தில் தமிழா் பிரச்னை குறித்து பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினா்.
அப்போது, ராணுவ வசமுள்ள இலங்கை தமிழா்களிடம் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திசாநாயக உறுதி அளித்தாா்.
முன்னதாக, படித்த இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலகத்துக்கு வெளியே பட்டதாரி இளைஞா்கள் போராட்டம் நடத்தினா். முன்னதாக, இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்க யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.