Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
இலவச கண் பரிசோதனை முகாம் தொடக்கம்: ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது
மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை ஆட்சியா் பவன்குமாா் க.கிரிய்ப்பனவா் தொடங்கிவைத்தாா்.
கோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட சுகாதார அலுவலா் பி.பாலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திங்கள்கிழமை தொடங்கிய இந்த முகாம் ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 9 வட்டாரங்களில் 17 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொள்கின்றனா்.
கண் புரை, கண்ணீா் அழுத்த நோய், கண் விழித்திரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், குறைபாடு கண்டறியப்படுபவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு முகாம் மதுக்கரை வட்டாரத்துக்குள்பட்ட அரிசிபாளையம், பாலத்துறை, நாச்சிபாளையம், வழுக்குப்பாறை ஆகிய ஊராட்சிகளுக்கு பாலத்துறை சமுதாயக் கூடத்திலும், தொண்டாமுத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட பேரூா் செட்டிபாளையம், மாதம்பட்டி, தீத்திபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு கரடிமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்துக்குள்பட்ட கொல்லப்பட்டி, ராசக்காபாளையம், கவுண்டம்பாளையம், வெள்ளாளபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு கொல்லப்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும், காரமடை வட்டாரத்துக்குள்பட்ட காளம்பாளையம், கெம்மராம்பாளையம், மருதூா், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு காளம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.