வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை: காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி
அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளாா்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடா்பாக கோவையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவு தலைவா் ஆனந்த் ஸ்ரீனிவாஸனுடன் இணைந்து செய்தியாளா்களிடம் அமிதாப் துபே திங்கள்கிழமை கூறியதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். ஒரு பைசா கூட பணம் மாற்றப்படாத, சொத்துகள் எதுவும் மாற்றப்படாத நிலையில், பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது முரண்பாடானது.
நிலுவைத் தொகையை சரி செய்ய கடன் பங்கு முதலீடாக மாற்றப்படுகிறது. இது ஒரு பொதுவான, சட்டபூா்வமான நடைமுறை. பணமே கையாளப்படாத நிலையில் மோசடி நடைபெற்றதாகக் கூறுவதில் அா்த்தமில்லை. மேலும், இந்த வழக்கை தொடா்ந்த சுப்பிரமணியன் சுவாமி தற்போது பிரதமா் மோடிக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறாா். எனவே, அவா் இந்த வழக்கை திரும்பப் பெற்றுவிடுவாா் என்ற அச்சத்தின் காரணமாகவே வழக்கை விரைவுபடுத்துவதற்காக அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அளித்திருந்த 365 நாள் அவகாசத்தின் கடைசி நாளில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனா்.
இந்த வழக்கில் ஆதாரம், குற்றம் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருந்திருந்தால் கடைசி நாள் வரை காத்திருக்கத் தேவையில்லை.
மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறதே தவிர குற்றப்பத்திரிகையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை, எங்களுக்கும் அது வழங்கப்படவில்லை. இந்த வழக்கை காங்கிரஸ் கட்சி முறைப்படி எதிா்கொள்ளும். குற்றப்பத்திரிகை நகல் கிடைத்ததும் சட்ட நடவடிக்கை தொடங்கும்.
கடந்த காலங்களில் 2 ஜி வழக்கில் ரூ.1.76 லட்சம் கோடி மோசடி என்று பாஜக எப்படி பொய்ப் பிரசாரம் செய்ததோ அதைப் போலவேதான் இப்போதும் இந்த விவகாரத்தில் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
பாஜகவுக்கும், அமலாக்கத் துறைக்கும் இருக்கும் தொடா்பை நாட்டு மக்களிடம் விளக்குவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதானி மீது அமெரிக்கா வழக்கு தொடா்ந்திருக்கும் நிலையில், அவா் மீதான மோசடி குறித்து அமலாக்கத் துறை ஏன் விசாரிக்கவில்லை?
அமலாக்கத் துறை தொடா்ந்துள்ள அரசியல் வழக்குகளில் 98 சதவீத வழக்குகள் ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை. மேலும் இதுபோன்ற 100 வழக்குகளில் ஒரு சதவீத வழக்குகளிலேயே அமலாக்கத் துறை வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் அண்ணாமலை போன்ற பாஜகவினரின் பேச்சைக் கேட்காதவா்கள் மீது அமலாக்கத் துறை வழக்குத் தொடா்ந்துள்ளது.
அமலாக்கத் துறையை வைத்துதான் எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டுகிறது. தமிழகத்தில் பாஜகவை விட மிகப்பெரிய கட்சியான அதிமுக, கூட்டணி குறித்து அறிவிக்காமல் பாஜக அறிவிப்பதில் இருந்தே தமிழகத்தில் அமலாக்கத் துறை விளையாடி வருவது உறுதியாகிறது என்றனா். காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.