பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!
இளநீர் குடித்தால் உடல் எடை குறையுமா?
இளநீர் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது, அது உண்மைதானா?
இளநீர் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை பானம். இது உடலுக்கு அதிக நீர்ச்சத்தை அளிக்கும். இனிப்புச் சுவை கொண்டது. பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி உள்ளன.
பழச்சாறுகள், செயற்கை குளிர்பானங்களில் அதிக கலோரி இருக்கும். ஆனால் இளநீர் குறைந்த கலோரி பானம் என்பதால் இதனை தினமும்கூட அருந்தலாம்.
இளநீர் எடையைக் குறைக்க உதவும் என்பது உண்மைதானா?
கண்டிப்பாக இளநீர் குறைந்த கலோரி கொண்டது. சத்துகளும் நிரம்பியிருக்கின்றன. பழச்சாறுகள், செயற்கை பானங்களுக்கு இது மாற்றாக இருக்கிறது. பசியை ஓரளவு கட்டுப்படுத்த உதவும். ஆனால் உடல் எடையைக் குறைக்கும் என்று நேரடியாகச் சொல்ல முடியாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதாவது மற்ற பானங்களைவிட குறைந்த கலோரி என்பதால் உடலுக்கு நல்லது. பசியைக் கட்டுப்படுத்துவதால் நீங்கள் சாப்பிடும் உணவு குறையும். இப்படியாக நேரடியாக எடையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் அதேநேரத்தில் மறைமுகமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உடலுக்கு கண்டிப்பாக இளநீர் அருந்தலாம். ஆனால், அது மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும் பானம் என்று சொல்ல முடியாது. உடல் எடையைக் குறைக்க இளநீரை ஒரு உணவாக கருதக் கூடாது.
இளநீருடன் நீங்கள் சத்தான காய்கறிகள், பழங்கள், இறைச்சி என சீரான உணவுப் பழக்கவழக்கம், கண்டிப்பாக உடற்பயிற்சி, நல்ல தூக்கம் அவசியம். மன அழுத்தத்தையும் சரியாக நிர்வகிக்க வேண்டும்.
இளநீர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும். குடல் இயக்கத்தை சரிசெய்யும். அதில் உள்ள பொட்டாசியம் உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும். செரிமானத்திற்கு உதவக் கூடும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடும்.
ஒரு கப் இளநீரில் 40-50 கலோரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 240 மிலி என்ற அளவில் இளநீர் எடுத்துக்கொள்ளலாம். அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பானது.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]