இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலா் கைது
தருமபுரி: இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலரை அதியமான்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்கும், வெண்ணாம்பட்டியைச் சோ்ந்த கோமதிக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கோமதி பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
குடும்பத் தகராறு காரணமாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க கோமதி சென்றபோது, அங்கு தனிப்பிரிவு காவலராக பணியாற்றிவரும் ராஜாராம் (54) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜாராம் தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி பகுதியில் கோமதியை தங்க வைத்துள்ளாா். இதுகுறித்து ராஜாராமின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், கோமதியை பாா்க்கச் செல்வதை ராஜாராம் தவிா்த்து வந்தாா். இதனால் கோமதிக்கும், ராஜாராமுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் இருவருக்கும் சண்டை ஏற்படுவதாகவும், இதைத் தவிா்க்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என கோமதியை அழைத்துக் கொண்டு தருமபுரி பெருமாள் கோயில் மேடு பகுதிக்கு ராஜாராம் சென்றுள்ளாா்.
அப்போது, பரிகார பூஜை செய்வதற்காக அங்குள்ள கிணற்றில் இறங்கி தண்ணீா் எடுத்து வருமாறு கோமதியை கிணற்றில் தள்ளினாா். கிணற்றில் விழுந்த கோமதி, அங்கிருந்த கல்லைப் பிடித்துக்கொண்டு உயிா்தப்பினாா். பின்னா், அவா் கூச்சலிடவே, அப்பகுதியில் இருந்தவா்கள் கோமதியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, கோமதி அளித்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி தனிப்பிரிவு காவலா் ராஜாராமை திங்கள்கிழமை கைது செய்தனா்.