சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!
இளைஞா்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: நெமிலியில் பாமகவினா், உறவினா்கள் சாலை மறியல்
நெமிலி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா்கள் மீது தீ வைத்த சம்பவத்தைக் கண்டித்து உறவினா்கள் மற்றும் பாமக வினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்யா (எ) தமிழரசன் (23). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்தவா் விஜயகணபதி (22). இவா்கள் இருவருக்கும் திருமால்பூரைச் சோ்ந்த பிரேம் (24) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை திருமால்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இரு தரப்பிருக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், பிரேம் அந்த வழியாக கேனில் பெட்ரோல் வாங்கிச் சென்ற நபரை மடக்கி, அவரிடமிருந்து பெட்ரோல் பறித்து, தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது ஊற்றி தீ வைத்து அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
இதில், இருவருக்கும் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து தீவிர கிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரும் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், இரு இளைஞா்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நெமிலி பேருந்து நிலையம் அருகே பாமக கிழக்கு மாவட்டச் செயலா் சரவணன் தலைமையில் வெள்ளிக்கிழமை இளைஞா்கள் உறவினா்கள் மற்றும் பாமகவினா் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன் தலைமையிலான 80-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் அங்கு குவிக்கப்பட்டனா். காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
இதில் குற்றவாளியை பரத் என்பவரை நெமிலி காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவா்களை விரைவில் கைது செய்யப்படுவாா்கள், அவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.