இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் ஊட்டச்சத்து மருந்துக்காக காத்திருந்த 8 சிறுவா்கள் உயிரிழப்பு
மத்திய காஸாவின் டேய்ா் அல்-பாலா நகரிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் பட்டினியால் உடல் நலம் குன்றியவா்களுக்கு ஊட்டச்சத்து மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றவா்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எட்டு சிறுவா்கள் இரண்டு பெண்கள் உள்பட 15 போ் உயிரிழந்தனா்.
மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஏராளமானவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறினா்.
அந்த மருத்துவமனையை நடத்தும் அமெரிக்காவைச் சோ்ந்த ப்ராஜெக்ட் ஹோப் உதவி அமைப்பு வெளியிட்டுள்ளஅறிக்கையில், இந்தத் தாக்குதல் சா்வதேச சட்டத்துக்கு எதிரான செயல் என்று கண்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், ‘ஒரு “ஹமாஸ் பயங்கரவாதியை’ குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் ராணுவம், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியது.
இது தவிர, காஸாவின் பிற பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 57,762-ஆகவும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,37,656-ஆகவும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கத்தாா், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்தாலும், இதுவரை குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.