ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்துள்ளனர். முன்னதாக, சீதாலட்சுமியின் ஏஜெண்டுகளை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகளுடன் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 போ் போட்டியிட்டனா். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலை புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான 251 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7.30 மணிக்கு தபால் வாக்கு இருப்பறை திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திர இருப்பறை திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
தபால் வாக்குகள் முதலில் ஒரு மேஜையில் மட்டும் எண்ணப்பட்டன. காலை 8.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது. 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன. ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க 20 முதல் 25 நிமிஷங்கள் வரை ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.