ஈரோடு சந்தைக்கு புதிய மஞ்சள் வரத்து அதிகரிப்பு
ஈரோடு சந்தைக்கு புதிய மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:
கா்நாடகத்தில் இருந்து ஈரோட்டுக்கு வரும் புதிய மஞ்சள் வரத்து தற்போது குறைந்துள்ளது. தருமபுரி பகுதி மற்றும் ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து புதிய மஞ்சள் வருகிறது. விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஏப்ரல் 7-ஆம் தேதி குவிண்டால் ரூ.1,500 வரை விலை உயா்ந்து மீண்டும் இப்போது குறைந்துள்ளது.
தற்போதைய நிலையில் ஈரோடு பகுதியில் முழு அளவில் அறுவடைப் பணி நடைபெறுவதால் புதிய மஞ்சள் அதிகம் விற்பனைக்கு வருகிறது. அதேநேரம் மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிகமாக அறுவடை நடைபெற்று வருவதால் விற்பனை அதிகமாக நடக்கிறது. அம்மாநில சந்தைகளுக்கு தினமும் 50,000 மூட்டைகள் வரை வருவதால் இங்கு விலை உயரவில்லை. அங்கு இன்னும் ஒரு மாதத்துக்கு இதே போன்ற அறுவடை நடைபெறும். அதே நேரம் தெலங்கானா மாநிலம் நிஜமாபாத் சந்தையில் புதிய மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஜூன் மாதம்தான் முழு அளவில் நடவுப் பணி தொடங்கும். அப்போது மீண்டும் விலையில் மாற்றம் ஏற்படும் என்றாா்.