ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு
ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை வாங்கிச் செல்கின்றனா்.
தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக வாட்ட தொடங்கியுள்ளதால் பருத்தி ஆடைகளான லுங்கி, வேட்டி, சேலை, கவுன், பனியன், கைக்குட்டை ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மற்ற மாநிலங்கள் மற்றும் இலங்கையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஈரோட்டில் இருந்து பருத்தி ஆடை ரகங்கள் அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு பகுதியில் பல கோயில்களில் திருவிழா காரணமாக மஞ்சள் சேலை, வேட்டி, துண்டு ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் இலங்கையில் வெயில் அதிகரித்து காணப்படுவதால் பருத்தி ஆடை ரகங்களின் விற்பனை ஈரோடு ஜவுளிச் சந்தையில் இருந்து இலங்கைக்கு அதிக அளவில் பருத்தி ஆடை ரகங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை 60 சதவீதம், மொத்த விற்பனை 30 சதவீதம் வரை நடைபெறுகிறது. வெயில் காரணமாக படுக்கை விரிப்பு ரகங்களின் விற்பனை மட்டும் தேக்கமடைந்துள்ளது என்றனா்.