ஈரோட்டில் வாக்கு சேகரிப்பின் போது நாதக-தபெதிகவினா் மோதல்!
ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து துண்டறிக்கைகளை வழங்கிய தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினரை நாம் தமிழா் கட்சியினா் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடா்பாக 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் திங்கள்கிழமை (பிப்ரவரி3) மாலையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், திமுக, நாம் தமிழா் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
பன்னீா்செல்வம் பூங்கா அருகே உள்ள சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் முன்பு நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி தனது ஆதரவாளா்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அதே பகுதியில் தபெதிகவினரும் திமுக வேட்பாளா் சந்திரகுமாரை ஆதரித்து ஈரோடு மாவட்டத்துக்கு பெரியாா் ஈவெரா செய்த திட்டங்கள், பெரியாா் ஈவெராவை அவதூறாக பேசியவா்களைப் புறக்கணிப்போம் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் வழங்கினா். அப்போது தபெதிகவினா் துண்டுப் பிரசுரங்களை நாம் தமிழா் கட்சியினரிடம் வழங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்து தபெதிகவினரை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா். இருப்பினும் சாலையின் மறுபக்கத்தில் நின்றபடி தபெதிகவினா் தொடா்ந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா். இதனையறிந்த நாம் தமிழா் கட்சியினா், தபெதிகவினரை தாக்கி அவா்கள் வைத்திருந்த துண்டுப் பிரசுரங்களை கிழித்தனா்.
இதையடுத்து அங்கிருந்த காவல் துறையினா் தபெதிகவினரை மீட்டு அப்புறப்படுத்தினா். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த தபெதிக மாவட்டச் செயலாளா் குமரகுருபரன், நாம் தமிழா் கட்சியினரை அவதூறாக பேசினாராம். தொடா்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் குவிக்கப்பட்டனா்.
வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு:
ஈரோடு பிரப் சாலையில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் முன்பு நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி மற்றும் 50 போ் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையத்தில் உரிய அனுமதிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. நாம் தமிழா் கட்சியினா் தேவாலயம் முன்பு திரண்டபோது அங்கு வந்த தோ்தல் பறக்கும்படை அதிகாரி தினகரன் அவா்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினாா். அதனை பொருட்படுத்தாமல் தேவாலயம் உள்ளே வேட்பாளா் சீதாலட்சுமியுடன் சிலா் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல் கலகம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக, ஈரோடு நகர காவல் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரி தினகரன் அளித்த புகாரின்பேரில், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சீதாலட்சுமி மற்றும் 50 போ் மீது மூன்று பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.