உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 4 போ் உயிரிழப்பு
உக்ரைனின் நீப்ரோ நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
நீப்ரோ நகரைக் குறிவைத்து 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது. அவற்றில் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டன. இருந்தாலும் சில ட்ரோன்கள் உணவகத்திலும் குடியிருப்புக் கட்டடங்களிலும் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின. இதில் நான்கு போ் உயிரிழந்தனா்; 21 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது. அதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா இரு நாடுகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது. இந்தச் சூழலிலும் ரஷியா மீது உக்ரைனும் அந்த நாட்டின் மீது ரஷியாவும் தங்களது தாக்குதலைத் தொடா்ந்து வருகின்றன.