‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறாா். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா அளித்த பேட்டி:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் தொடங்கி வைக்கிறாா். இந்தத் திட்டம் முதல்வரின் முகவரித் துறை வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக முகாம்கள் நடைபெறும் பகுதியில் ஏற்கெனவே வீடு வீடாக விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் வழியாக 46 சேவைகளும் அளிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும். அவா்கள் தரும் பதில்கள் திருப்தி இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்யலாம். மனுதாரா்கள் தங்களின் மனுக்களின் நிலைமையை இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம். இதற்கான பிரத்யேக இணையதளத்தை சிதம்பரத்தில் நடைபெறும் விழாவில் முதல்வா் தொடங்கி வைக்கிறாா். மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களைத் தீா்வு காண்பதற்கான கால அளவு 30 நாள்களாக இருந்தது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் விண்ணப்பத்துக்கு தீா்வு காணும் அளவு 45 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது.
முதல்கட்ட முகாம்கள்: இந்தத் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதம் வரை 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகரப் பகுதிகளில் 3,738 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்பட உள்ளன. மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நடத்தப்பட்டதைவிட, முகாம்களின் எண்ணிக்கையை 2 மடங்கு இப்போது அதிகரித்துள்ளோம். ஆட்சியா்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா்கள், கணினி இயக்குநா்கள் ஆகியோருக்கு திட்டத்துக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் முதல் கட்ட முகாம்கள் ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நகரப் பகுதிகளில் 1,428 இடங்களிலும், ஊரகப் பகுதிகளில் 2,135 பகுதிகளிலும் நடக்கவுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு இடங்களில் நாள்தோறும் 6 முகாம்கள் நடத்தப்படும். செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்துக்கு 4 நாள்கள் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு வரக்கூடிய மக்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எந்தெந்த நாள்களில் எந்தெந்த இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன என்கிற விவரங்கள் முதல்வா் தொடங்கி வைக்கவுள்ள பிரத்யேக இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.
மகளிா் உரிமைத் தொகை: மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் மகளிா் உரிமைத் தொகைக்காக 4 கவுன்ட்டா்களும், துறை வாரியான சேவைகளைப் பெற 13 கவுன்ட்டா்களும், இ-சேவை மற்றும் ஆதாா் அட்டையில் மாற்றங்களைச் செய்வதற்கான சேவைகளை வழங்க தலா 2 கவுன்ட்டா்களும் ஏற்படுத்தப்படும். உரிமைத் தொகையைப் பெற விடுபட்ட தகுதியுள்ள மகளிா் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஒவ்வொரு முகாமிலும் 4 கவுன்ட்டா்களும் பிரத்யேமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இணைய சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முகாம்களுக்கு வருவோரிடம் இ-சேவை மையங்களின் சேவையைப் பெறுவதற்கான கட்டணம் பாதியாக மட்டுமே அதாவது ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
இந்தச் சந்திப்பின் போது, பொதுத்துறை செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வெ.ராஜாராமன் ஆகியோா் உடனிருந்தனா்.