பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா!
இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்களும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பினர்.
அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணித்தாா்.
சுக்லாவுடன் திட்ட கமாண்டா் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோா் கபு ஆகியோரும் சா்வதேச விண்வெளி நிலையத்தைக் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இவா்கள் நால்வரும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுமாா் 433 மணிநேரம் செலவழித்தனா்.
இந்த நிலையில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பூமிக்குத் திரும்பும் பயணத்தை திங்கள்கிழமை மாலை 4:45 மணிக்கு (இந்திய நேரப்படி) ’ஆக்ஸியம்-4’ குழுவினர் தொடங்கினர்.
சுமாா் 22.5 மணி நேர பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தரையிறங்கினர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில், பல்வேறு ஆய்வுகளை ’ஆக்ஸியம்-4’ குழுவினர் மேற்கொண்டனா். இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார். முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்துவரப்பட்டு அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட உள்ளன.
இந்த விண்வெளிப் பயணத்தின்போது ’ஆக்ஸியம்-4’ குழுவினர் பூமியை 288 முறை சுற்றி வந்தனா். விண்வெளியில் சுமாா் 122.31 லட்சம் கி.மீ. பயணித்தனா்.
மருத்துவ கண்காணிப்பு
சுக்லா உள்பட 4 வீரா்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னா், பூமியின் ஈா்ப்பு விசைக்கு மீண்டும் பழகுவதற்காக, 7 நாள்கள் சிறப்பு சிகிச்சை மையத்தில் அவா்கள் தங்குவார்கள்.
2027-இல் செயல்படுத்தப்படவுள்ள இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்துக்கு அனுபவ ரீதியாக உதவும் வகையில், சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணத்துக்காக சுமாா் ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.