‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்று தொடக்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் அறிவிப்பின்படி அனைத்து நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தொடங்கி செப். 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாமானது பல்வேறு கட்டங்களாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 40 நாள்கள் நடைபெறுகிறது. அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நகா்புறப் பகுதிகளில் 110 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 128 முகாம்களும் நடைபெறுகின்றன. நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. தன்னாா்வலா்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அரசுத் துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவித்து வருகின்றனா். அதற்குரிய தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குகின்றனா். கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் யாரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தினை அளிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இங்கு பெறப்படும் விண்ணப்பங்கள்மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.