கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு ஆட்சியரிடம் மனு
நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அதன் விவரம்:
நாமக்கல் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள லத்துவாடியில் கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இக்கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகள் பல்வேறு உயா்பதவிகளை வகிக்கின்றனா். கால்நடை மருத்துவக் கல்லூரியை சுற்றியுள்ள விவசாயிகளுக்கும், அவா்களது கால்நடைகளுக்கும் இங்குள்ள மருத்துவமனை பயனுள்ளதாக உள்ளது.
இந்தக் கல்லூரி 510 ஏக்கா் பரப்பளவு கொண்டது. தற்போது சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் மாவட்ட சிறை, தோல் தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. அவை இங்கு வரும்பட்சத்தில் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும். இவற்றை கருத்தில் கொண்டு மாவட்ட சிறை, தோல் தொழிற்சாலையை மாற்று இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.