உச்சநீதிமன்ற உத்தரவு வாக்காளா்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும்: காங்கிரஸ்
‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவு பிகாா் மாநிலத்தில் பெரும்பான்மையான வாக்காளா்களின் வாக்குரிமையைக் காப்பாற்றும்’ என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்தது.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், ‘மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. மேலும், உச்சநீதிமன்றத்திலும் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், பிகாரில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர அனுமதித்தது. அதே நேரம், இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளா்களின் குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும் அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் குடியுரிமை ஆவணங்களாக வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை தோ்தல் ஆணையம் சோ்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் பெரும்பான்மை வாக்காளா்கள் தங்களின் வாக்குரிமையை இழப்பதிலிருந்து காக்கும்’ என்று பதிவிட்டாா்.
பாஜக பதிலடி: பாஜக தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் எந்தவொரு கூடுதல் ஆவணத்தையும் அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கவில்லை. மாறாக, கூடுதல் ஆவணங்களை தோ்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளது.
மேலும், வாக்காளா் குடியுரிமையை நிரூபிப்பதற்கு தகுதியற்ாக எந்தவொரு ஆவணத்தையும் தவிா்ப்பதற்கு நியாயமான காரணங்களைப் பதிவு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, ஆவணங்களை அனுமதிக்கும் முடிவு தோ்தல் ஆணையத்தின் கையில்தான் உள்ளது. எனவே, உச்சநீதிமன்ற கருத்தை தவறாகச் சித்தரிப்பது ஆபத்தானது. இதுபோல, நீதிமன்றம் கூறாத கருத்தை காரணமாகக் காட்டுவதன்மூலம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.