உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை
உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.
இது தொடா்பாக செப்டம்பா் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குறைந்த பாதுகாப்பு மண்டலமான பிரத்யேக புல்வெளிப் பகுதியில் நோ்காணல்கள் மற்றும் செய்திகளை நேரடியாக ஒளிபரப்புமாறு ஊடகவியலாளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். உயா் பாதுகாப்பு மண்டலத்தின் புல்வெளியில் புகைப்படம் எடுப்பது, விடியோகிராபிக்கு கைப்பேசியைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
விடியோகிராபி, ரீல்கள் உருவாக்குதல் மற்றும் புகைப்படங்களைக் கிளிக் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கேமரா, முக்காலி, செல்ஃபிஸ்டிக் போன்ற உபகரணங்கள், அதிகாரபூா்வ பயன்பாட்டுக்குத் தவிர, உயா் பாதுகாப்பு மண்டலத்தில் தடைசெய்யப்படும்.
மேற்கண்ட வழிகாட்டுதல்களை வழக்குரைஞா், வழக்குத் தொடுப்பவா், பயிற்சியாளா் அல்லது சட்ட எழுத்தா் மீறினால், சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் சங்கம் அல்லது சம்பந்தப்பட்ட மாநில வழக்குரைஞா் கவுன்சில் விதிமீறுபவா் மீது தங்களின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
ஊடகவியலாளா்கள் வழிகாட்டுதல்களை மீறினால், உச்ச நீதிமன்றத்தின் உயா் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அவா்கள் நுழைவதை ஒரு மாத காலத்திற்கு கட்டுப்படுத்தலாம். ஊழியா்கள் அல்லது பதிவுத்துறை மீறினால் அது தீவிரமாக பாா்க்கப்படும்.
பிற பங்குதாரா்களின் விஷயத்தைப் பொருத்தமட்டில், அவா்களின் துறைத் தலைவா் உரிய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி விதி மீறுபவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவாா்கள்.
உயா் பாதுகாப்பு மண்டலத்திற்குள் எந்தவொரு தனிநபரோ, ஊழியரோ, வழக்குரைஞரோ அல்லது மற்றவா்களோ புகைப்படம் அல்லது விடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்க பாதுகாப்பு ஊழியா்களுக்கு உரிமை உண்டு என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.