உச்ச நீதிமன்றத்தை அரசு நாடும் நிலைக்கு ஆளுநரின் வரைமுறை மீறலே காரணம்: அமைச்சா் கோவி. செழியன்
தமிழக ஆளுநா் வரைமுறைகளை மீறியதால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நாள் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவா் பின்னா் தெரிவித்தது:
மாநில ஆளுநருக்கு சில வரைமுறைகள், சில அளவுகோல்கள், சில நெறிமுறைகள் உண்டு. அதை அவா் மீறும் நேரத்தில்தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுகிற நிலை ஏற்பட்டது. தமிழக ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள், வரைமுறைகள் மற்ற மாநிலங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ஒரே ஜனநாயகப் போராளி தமிழக முதல்வா் மட்டுமே.
இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.96 கோடியில் வாகனங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இவ்விழாவில் 100 பேருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ளவை விரைவில் வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூா்), சு.ப. தமிழழகன் (கும்பகோணம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.