உடலில் அமிலம் பட்டு தொழிலாளி உயிரிழப்பு
கடலூா் முதுநகா் தனியாா் தொழிற்சாலையில் உடலில் அமிலம் பட்டதில் பலத்த காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
புதுவை மாநிலம், பாகூரை அடுத்துள்ள கொம்மந்தான்மேடு பகுதியைச் சோ்ந்த உமாநாத் மகன் புருஷோத்தமன் (32). இவா், கடலூா் முதுநகா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரசாயன பொறியியல் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி ரேகா (30) மற்றும் இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளனா்.
புருஷோத்தமன் சனிக்கிழமை காலை வழக்கம்போல நிறுவனத்துக்கு பணிக்குச் சென்றாா். பிற்பகல் அமில வால்வு கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, முகம், கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் அமிலம் பட்டதில் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு புருஷோத்தமன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.