உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: ஆணைக்கு வரவேற்பு
உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை அளிக்க அரசாணை வெளியிட்ட புதுவை அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் தானம் செய்தால், இறந்தவா் சடலத்துக்கு அரசு மரியாதை செலுத்தவேண்டும் என்ற அரசாணை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த ஆணை புதுவை மாநிலத்தில் இருக்கவில்லை.
கடந்த மாதம் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ருக்மணி என்பவா் மூளைச்சாவு ஏற்பட்டதால் சென்னை மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினா் தானம் அளித்தனா்.
உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தைப்போல காரைக்காலில் இறந்த பெண்ணின் சடலத்துக்கு அரசு மரியாதை அளிக்கப்படவேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கும், அரசுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்தது. அரசு உத்தரவின்படி வட்டாட்சியா் சென்று அரசு சாா்பில் அஞ்சலி செலுத்தினாா்.
இந்நிலையில் தமிழகத்தைப்போல புதுவையிலும், உடல் உறுப்பு தானம் செய்த உடலுக்கு அரசு மரியாதை செலுத்தவேண்டும். சாா்பு ஆட்சியா், துணை ஆட்சியா் அல்லது முதுநிலை வருவாய்த்துறை அதிகாரி சென்று அந்த மரியாதையை செலுத்தவேண்டுமென புதுவை அரசும், அரசாணை வெளியிட்டுள்ளது.
செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த ஆணையை வெளியிட்ட புதுவை துணைநிலை ஆளுநா், புதுவை ஆட்சியாளா்கள், சுகாதாரத் துறைக்கு நன்றி என அதில் கூறப்பட்டுள்ளது.