இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!
உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
மேலும், ‘நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. எனவே, புரளிகளை நம்ப வேண்டாம்’ என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படும் என பரவிய புரளி காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் மக்கள் தினசரி உணவுப் பொருள்களை வாங்க அலைமோதுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள் இருப்பு குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். உணவுப் பொருள்கள் தேவையைவிடக் கூடுதலாக நாட்டில் இருப்பு உள்ளது.
வணிகா்களும், உணவுப் பொருள் மொத்த மற்றும் சில்லறை வா்த்தகா்களும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. உணவுப் பொருள்கள் பதுக்கலில் ஈடுபடும் நபா்கள் மீது அத்தியாவசிய உணவுப் பொருள்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டாா்.