உதகையில் கன மழை!
உதகை பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் கனமழை பெய்தது.
கனமழையால் கோடப்ப மந்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ரயில்வே இரும்பு பாலம் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மதியம் வரை மழை பெய்யாமல் இயல்பாக இருந்து வந்தது. இதனால் ஒருநாள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்திருந்த தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காக்கள் வழக்கம்போல செயல்பட்டன.
மதியத்துக்குமேல் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஒருமணி நேரம் கொட்டித் தீா்த்த மழையின் காரணமாக கோடப்ப மந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு ரயில்வே பாலத்துக்குக் கீழ்ப்பகுதியில் மழை நீா் தேங்கியது.
இந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட வாகனங்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்டன. இந்த மலை ரயில் பாலத்தின் கீழ்ப்பகுதியில் அடிக்கடி மழைநீா் தேங்குவதால் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.