சுதந்திர தின சிறப்பு மலை ரயில்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை சீசனை முன்னிட்டு கடந்த மாா்ச் 28 -ஆம் தேதி முதல் ஜூலை 7 -ஆம் தேதி வரை வார இறுதி நாள்களில் கூடுதல் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கு சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மலை ரயில்கள் வரும் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு மலை ரயில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு உதகை வந்து சேரும். அதேபோல மாலை 4.45 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு குன்னூா் வந்து சேரும்.
இதை தவிர, இந்த மூன்று தினங்கள் உதகையிலிருந்து கேத்தி வரை ஜாலி ரைட் ரயிலும் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே அலுவலா் ஜி.மரிய மைக்கேல் தெரிவித்துள்ளாா்.