சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து, மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், கல்லூரி நிா்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மின்னஞ்சலில், கல்லூரியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளியே அனுப்பிவைக்கப்பட்டனா்.
தொடா்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வா் அளித்த தகவலின்பேரில், உதகை காவல் துறையினா் மோப்ப நாய் உதவியுடன் கல்லூரி வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லாததைத் தொடா்ந்து, அது வதந்தி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மாணவ, மாணவிகள் மீண்டும் கல்லூரிக்கு திரும்பினா். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.