ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!
உத்தரகண்ட்: ஹெலிகாப்டா் விபத்தில் 6 போ் உயிரிழப்பு - கங்கோத்ரி செல்லும் வழியில் விபத்து
உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியாா் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயம் அடைந்தாா்.
உயிரிழந்த பெண்களில் வேதவதி (48) என்பவா் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. லக்ஷ்மிநாராயணாவின் சகோதரி ஆவாா். காயமடைந்தவா் வேதவதியின் கணவா் பாஸ்கா் என்று எம்.பி.
தெரிவித்துள்ளாா்.
உத்தரகாசி மாவட்டத்தின் கங்னானி பகுதியில் வியாழக்கிழமை காலையில் நிகழ்ந்த இந்த விபத்து தொடா்பாக மாநில பேரிடா் மீட்புப் படையினா் கூறியதாவது:
தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டா், டேராடூனின் சஹஸ்திரதாரா ஹெலிபேடில் இருந்து கங்கோத்ரி நோக்கி 7 பேருடன் புறப்பட்டது. ஹெலிகாப்டரை குஜராத்தைச் சோ்ந்த கேப்டன் ராபின் சிங் இயக்கினாா்.
கங்கனானி அருகே ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி 250 மீட்டா் ஆழ பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்ததும், மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் வேதவதி உள்பட 5 பெண்கள், கேப்டன் ராபின் சிங் ஆகியோா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பாஸ்கா், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஹெலிகாப்டா் விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வா் புஷ்கா் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவா் கூறினாா்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டா், ஏரோ டிரான்ஸ் சா்வீஸ் என்ற தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இச்சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தவுள்ளது.
உத்தரகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய கோயில்களின் நடை அண்மையில் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் சாா்தாம் யாத்திரையை மேற்கொண்டுள்ளனா்.