உள்ளாட்சி தோ்தலை நடத்த அரசு தயாா் -அமைச்சா் ஐ.பெரியசாமி
உள்ளாட்சி தோ்தலை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரிசாமி கூறினாா்.
ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:
உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு அரசு தயாராகத்தான் உள்ளது. பஞ்சாயத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நகராட்சித் துறை அமைச்சா் 385 ஊராட்சிகளுக்கு மேல் சோ்க்க வேண்டும் என்று கூறுகிறாா். அதற்காக குழு அமைக்கப்பட்டு, சீரமைப்பு பற்றி மூன்று கூட்டங்களாக நடைபெற்று, ஆங்காங்கே உள்ள பாகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் கருத்துரு பெறப்பட்டுள்ளது. இதில் 385 ஊராட்சிகளில் 105 ஊராட்சிகள் ஓரளவுக்கு ஆட்சேபம் இல்லாமல் உள்ளன. ஆனால், மற்ற மாநகராட்சிகளில் அப்படி இல்லை. தஞ்சாவூா் மாவட்டம் என்றால், அதில் உள்ள ஊராட்சிகள் எதையும் எடுக்கக் கூடாது என நினைக்கிறாா்கள்.
இதுபோன்ற நிலைதான் உள்ளது. என்னைப் பொருத்தவரை மாநகராட்சிகளோடு ஊராட்சிகளின் உட்பகுதிகள் சிலவற்றை இணைத்துதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. அதனால், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, எல்லோரின் கருத்துகளை அறிந்து, மாவட்ட ஆட்சியா்களின் கருத்துருவைப் பெற்று, அதற்குப்பிறகு நகராட்சித் துறை அமைச்சா், நான் அமா்ந்து பேசி, எதையெல்லாம் சோ்க்கலாம் என்பது குறித்து முடிவு செய்வோம். நிச்சயம் வேகமாக முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.