Vikatan Digital Awards 2025: டிஜிட்டல் நாயகர்களை அங்கீகரிக்கும் மேடை; சென்னையில்...
உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும்!
உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே கடந்த செப். 10 முதல் தென்மாவட்ட ரயில்கள் சில எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12654/ 12653), எழும்பூர் - ராமேஸ்வரம் சேது (22661/ 22662), எழும்பூர் - ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படுகின்றன. அதேபோல அங்கிருந்து திரும்பும் ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலேயே நிறுத்தப்படுகின்றன.
எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் (22675) ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. ஆனால் திருச்சியில் இருந்து திரும்பும் ரயில் எழும்பூர் வரை செல்கிறது.
எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) எழும்பூரில் இருந்து புறப்படுகிறது. ஆனால் மதுரையில் இருந்து திரும்பும் ரயில் தாம்பரத்திலேயே நிறுத்தப்படுகிறது.
புதிய அறிவிப்பு
இதன் தொடர்ச்சியாக உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர் - தஞ்சாவூர் இடையிலான 'உழவன் எக்ஸ்பிரஸ்' மற்றும் எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் 'அனந்தபுரி எக்ஸ்பிரஸ்' ரயில்கள் வருகிற செப். 17 ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும், அதேபோல அங்கிருந்து சென்னைக்கு திரும்பும் ரயில்கள் தம்பரத்திலேயே நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.