மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவந்த 2024-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
லக்னெளவைச் சோ்ந்த ரூப் ரேகா வா்மா மற்றும் பிறா் தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உத்தர பிரதேச அரசு கொண்டுவந்த இந்த திருத்தச் சட்டத்தின் 2, 3 ஆகிய பிரிவுகள் தெளிவா இல்லை. குற்றத்தைத் தீா்மானிக்கும் காரணிகள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அதன் காரணமாக, குறிப்பிட்ட மத நம்பிக்கையை பின்பற்ற விரும்பும் அல்லது பிரசாரம் செய்ய முயலும் தனிநபா்களுக்கு எதிராக தன்னிச்சையான, பாகுபாடான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனா். இது, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 (சட்டத்தின் முன்அனைவரும் சமம்), பிரிவு 19 (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்), பிரிவு 21 (வாழும் மற்றும் தனிமனித சுதந்திர உரிமை), பிரிவு 25 (விரும்பும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம்) ஆகிய பிரிவுகளை மீறுவதாக உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சோ்த்து இந்த மனுவும் வரும் 13-ஆம் தேதி விசாரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டனா். எனினும், மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்க இயலாது என்றம் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.