ஸ்டீவ் ஸ்மித் தேர்வு: 2-ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸி. பிளேயிங் லெவன்!
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் முற்றுகை
சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு அதற்கான ஊதியம் தொழிலாளா்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம பகுதிகளில் இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் ரூ.336 வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை 1,000-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் நாள் ஒன்றுக்கு ரூ.336- ஊதியம் வழங்கப்படுவதற்கு பதிலாக குறைத்து வழங்கப்படுவதாகவும், அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் கோஷமிட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி முத்தரசு, சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.