எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி
புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையின்போது, அலைகள் போல பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்களும் ஆளில்லா சிறு போர் விமானங்களும் இந்திய எல்லையை நோக்கி வந்தன. அவை அனைத்தும் இந்திய பாதுகாப்புப் படையால் முறியடிக்கப்பட்டதாக விமானப் படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்திய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்றும், எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம், எங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை நிறைவாக செய்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு, இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட பதிலடி குறித்து விமானப் படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி இன்று விளக்கம் அளித்தார்.
அவர் பேசுகையில், பாகிஸ்தான் விமானப்படையின் தாக்குதலை, இந்தியாவின் நவீன மற்றும் பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்திய முறியடித்தோம். பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து ட்ரேன்களையும் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் எதிர்கொண்டோம். நவீன ரக ஆயுதங்களோடு, பாரம்பரிய ஆயுதங்களையு பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையில் பயன்படுத்தி தாக்குதலை முறியடித்துள்ளோம்.
நமது வான் பாதுகாப்பு வலிமையான சுவர் போன்றது. அதை தகர்ப்பது எளிதல்ல. மத்திய அரசின் துணையால்தான் இந்த வலிமையை அடைந்தோம். மத்திய அரசு நிதி ரீதியாக, கொள்கை ரீதியாக பல வகைகளில் துணை நின்றது. மத்திய அரசின் துணையால் கடந்த 10 ஆண்டுகளில் வான் பாதுகாப்பு அமைப்பு வலிமையடைந்தது.
பாகிஸ்தானின் விமானப்படை தளத்தை அடித்து வீழ்த்தினோம். அதனால் ஏற்பட்ட இழப்புகளின் விடியோக்களையும் பகிர்ந்துகொள்கிறோம் என்று அறிவித்தார்.
பாகிஸ்தானின் ரெய்னியார் விமான தளத்தில் இந்தியா தரப்பில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட சேதங்களின் விடியோக்களும் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து பேசிய ஏ.கே. பாரதி, நமது தரப்பில் குறைவான இழப்புகளே ஏற்பட்டன. இந்த சண்டையை முந்தைய சண்டையோடு ஒப்பிட முடியாது, ஒவ்வொரு மோதலும் தனித்துவமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எத்தனை போர் விமானங்கள் இந்தியா தரப்பில் பயன்படுத்தப்பட்டன என்ற செய்தியாளர் கேள்விக்கு, பாகிஸ்தான் உடனான சண்டை குறித்த முழு விவரங்களையும் பகிர்ந்துகொள்ள முடியாது என்று, பதிலளித்தார் ஏ.கே. பாரதி.