எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தவருமான எல்.இளையபெருமாளை சிறப்பிக்கும் வகையில், அவருக்கு நூற்றாண்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், சிதம்பரம் புறவழிச்சாலையில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் எல்.இளையபெருமாள் திருவுருவச் சிலையுடன் அமைக்கப்பட்ட நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, எல்.இளையபெருமாள் திருவுருவச் சிலையையும், நூற்றாண்டு அரங்கத்தையும் திறந்து வைத்துப் பேசியது:
இளையபெருமாள் பள்ளியில் பயிலும்போதே தீண்டாமை அடையாளமாக இருந்த இரட்டை பானை முறையை எதிர்த்துப் போராடியவர். அவருடைய நூற்றாண்டு அரங்கம் திறப்பு நாளில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் பொதுமக்களுடைய குறைகளை விரைந்து தீர்க்க மாபெரும் முன்னெடுப்பாக "உங்களுடன் ஸ்டாலின்' என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கிவைத்துவிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற முன்னெடுப்பு மூலமாக பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று 100 நாள்களில் தீர்வு காண்பேன் என்று உறுதியளித்திருந்தேன். சொன்னதுபோல முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் "உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற தனித் துறையை உருவாக்கி, அந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.
இதனால், திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து மக்கள் இன்னும் பல கோரிக்கை மனுக்களை வழங்கத் தொடங்கினார்கள். இதற்காக முதல்வரின் முகவரி என்ற தனித் துறையை உருவாக்கினோம். அடுத்து, மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5,000 முகாம்கள் நடத்தி, பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம்.
இப்போது, அதன் அடுத்தகட்டமாக "உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை தொடங்கி இருக்கிறோம். மொத்தம் பத்தாயிரம் முகாம்கள் நடைபெறவுள்ளன.
மகளிர் உரிமைத் தொகை:
தகுதி இருந்தும் மகளிர் உதவித்தொகை பெறாதவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பங்களைக் கொடுத்தால், நிச்சயமாக ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் வரிசையில் "உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் வீடு தேடி மனுக்களைப் பெறுவார்கள்.
தமிழக வரலாற்றில் திராவிட மாடல் அரசுதான் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிகமான திட்டங்களைத் தந்திருக்கிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் மட்டும் போதாது. சுயமரியாதை சமூகத்தில் ஆவணங்களிலிருந்து ஜாதிய அடையாளங்கள் தொடர்ந்து நீக்கப்படும். ஜாதி அடையாளத்தோடு இருந்த கல்லூரி விடுதிகளை சமூக நீதி விடுதிகள் என மாற்றி இருக்கிறோம்.
சமூக விடுதலைக்காகப் பயணிப்பது என்பது நீண்ட நெடிய பயணம். அதற்கு காலம் பிடிக்கும்; எல்லாம் மாறும்; நிச்சயம் மாற்றுவேன். அதற்காக திராவிட மாடல் சமூக விடுதலை தனது பங்களிப்பை உறுதியாக செலுத்தும். அதற்கு இளையபெருமாள் போன்ற தலைவர்களின் வாழ்வும், அவருடைய படையும், அமைப்பும் வழிகாட்டட்டும்.
எதிரணியின் திட்டம் பலிக்காது: இந்த மேடையில் பெரியாரிய வழியில் வந்த திராவிட இயக்கத் தலைவர்கள், மார்க்சிய சிந்தனை கொண்ட தலைவர்கள், காந்திய வழியில் வந்த தேசிய இயக்கத் தலைவர்கள், அம்பேத்கர் இயக்கத் தலைவர்கள் என அனைவரும் ஓரணியில் இருக்கிறோம்.
இதுதான் "ஓரணியில் தமிழ்நாடு'. தமிழ்நாடு இப்படி ஓரணியில் இருக்கும்போது, தில்லி அணியின் எந்த காவித் திட்டமும் இங்கே பலிக்காது என்றார் முதல்வர்.
விழாவில் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.