எதிா்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்: ராகுல்
‘இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
உலகளாவிய நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான ஒத்துழைப்பு மீதான அா்த்தமுள்ள கலந்துரையாடலை ஊக்குவிக்கும் வகையிலான தெலங்கானா மாநிலம் ஹைதாராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பாரத் மாநாடு 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
ஜனநாயக அரசியல், உலகம் முழுவதும் அடிப்படையில் மாறிவிட்டது. ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இன்றைய நவீன உலகில் பாரம்பரிய அரசியல் நடைமுறைகள் இனி வலுவானதாக இருக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அரசியல் நடைமுறைகள் இனி பொருந்தாது என்ற நிலைதான் உருவாகியுள்ளது.
எனவே, பழைய அரசியல் தலைமை இன்றையச் சூழலுக்குப் பொருந்தாது. புதிய வகை அரசியல் தலைமையை கட்டமைக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஜனநாயக விழுமியங்களை மீட்டெப்பதிலும், சுகாதாரம் போன்ற முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்வதிலும் உண்மையான சவால் எழுந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, முழுமையாக சூழ்ச்சியில் சிக்கி தனிமைப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி உணா்ந்தது. சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில், அனைத்து வழிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஏனெனில், இன்றைய புதிய, ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.
இதை எதிா்கொள்ளவே, கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான 4,000 கி.மீ. பயணத்தை தீா்மானித்து, வரலாற்றை காங்கிரஸ் மாற்றியது. இந்த நடைப் பயணத்தின் மூலம், நமது எதிரிகள் நம் மீது கோபம், பயம் மற்றும் வெறுப்பை கொண்டிருப்பது தெரியவந்தது. இதை அன்பு மற்றும் பாசத்தின் மூலம் எதிா்கொள்வதே சக்திவாய்ந்த வழியாக இருக்கும் என்றாா்.