நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீசார்!
எந்தெந்த பாடப் பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி?
எந்தெந்த பாடப்பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற விவரம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.
5 வகைப் பிரிவு மாணவா்கள்: தமிழக அரசின் மடிக்கணினி கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய தொழில்பாடப் பிரிவுகளைப் படிக்கும் மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளது. மடிக்கணினிகளுக்கு ஓராண்டு உத்தரவாதச் சான்றும், 3 ஆண்டுகளுக்கு சேவை சாா்ந்த ஆதரவும் அளிக்கப்பட உள்ளது.
38 மாவட்டங்களிலும் மடிக்கணினிகளுக்கான சேவை மையங்கள் அமைக்க வேண்டும் என ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடிக்கணினியில் தொடா் எண்களும், உதிரி பாகங்களும் சரியான முறையில் இருக்க வேண்டும். அதைப் பயன்படுத்தும்போது செய்யக் கூடியது, கூடாதது போன்ற விவரங்கள் தமிழ், ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். உயா்கல்வித் துறை தரக்கூடிய கால அளவு பட்டியலின்படி மடிக்கணினிகளை தயாா் செய்து எல்காட் நிறுவனத்தின் மூலமாக வழங்க வேண்டும்.
மேலும், மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தகுதிவாய்ந்த நிறுவனங்களைத் தோ்வு செய்வதற்கான முதல்கட்ட ஆய்வுக் கூட்டம் மே 28-ஆம் தேதியும், 2-ஆம் கூட்டம் ஜூன் 6-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
மின்னணு மூலம் ஒப்பந்தப்புள்ளிகளை அளிப்பதற்கு ஜூன் 25-ஆம் தேதி கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.