என்னுடைய திறன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு... நிதீஷ் குமார் ரெட்டி பேசியதென்ன?
தன்னுடைய டெஸ்ட் போட்டியில் விளையாடும் திறனை சந்தேகப்பட்டவர்களுக்கு, தன்னால் விளையாட முடியும் என நிரூபித்துவிட்டதாக இந்திய அணியின் இளம் வீரர் நிதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தினார்.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!
என்னுடைய திறனை சந்தேகப்பட்டவர்களுக்கு...
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய நிதீஷ் ரெட்டி, என்னுடைய திறன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு அவர்கள் நினைத்தது தவறு என நிரூபிக்க விரும்பினேன் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சிலர் என் திறன் மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர் ஒருவரால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிகப் பெரிய தொடரில் விளையாட முடியுமா என சந்தேகப்பட்டனர். நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருந்திருக்கும் என எனக்குத் தெரியும். என்னைப் பற்றிய அவர்களது சந்தேகங்கள் தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும் என நினைத்தேன். இந்திய அணிக்காக என்னுடைய 100 சதவிகித உழைப்பைக் கொடுப்பதற்காக நான் இங்கு இருக்கிறேன் எனக் கூறிக்கொள்ள விரும்பினேன் என்றார்.
இதையும் படிக்க:“200 விக்கெட்டுகள்...” டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
நிதீஷ் ரெட்டி முதல் இன்னிங்ஸில் 189 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.