செய்திகள் :

எப்படியிருக்கிறது இந்த சூப்பர்ஹீரோ கதை? லோகா - திரை விமர்சனம்!

post image

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான லோகா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

லோகா சந்திரா சேப்டர் - 1 என்கிற டைட்டில் கார்ட் வருவதற்கு முன்பே இப்படம் ஒரு சூப்பர் ஹீரோ கதை என்பதை அழகான விஎஃப்எக்ஸ் மூலம் பதிவு செய்கின்றனர். சூப்பர் ஹீரோவா? இல்லை ஹீரோயின். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக அறிமுகமாகிறார். அவர் யார், எங்கிருந்து வருகிறார்? என்கிற எந்த தகவல்கள் இல்லை. ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக சந்திரா பெங்களூருவுக்கு வரவழைக்கப்படுகிறார். பகலில் வீட்டிற்குள்ளேயே இருப்பவர் இரவில் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கிறார். மறுபுறம் உடல் உறுப்புகளைத் திருடும் கும்பல் ஒன்று நகரைச் சுற்றி வருகிறது. இவர்களும் சந்திராவும் ஒருகட்டத்தில் சந்திக்கும்போது சூடுபிடிக்கும் கதை பின் இறுதிவரை பரபரப்பாக நகர்கிறது. உண்மையில், சந்திரா யார்? அவருடன் இருப்பர்கள் யார்? என்கிற அறிமுக கதையையே சேப்டர் - 1 என்கிற முதல் படமாக எடுத்திருக்கின்றனர்.

இயக்குநர் டோமினிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா முதலில் எதார்த்த பாணியில் துவங்கி பின் லாஜிக்குகளை உடைத்து வேறு ஒரு கதையாக மாறுகிறது. சூப்பர்ஹீரோ கதையென்பதால் லாஜிக் பிரச்னைகள் இல்லை. இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி நேர்த்தியான திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான படத்தைக் கொடுத்திருக்கிறார்.

வசனங்களும், காட்சியின் அழுத்தமும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியாகவே லோகா உருவாகியிருக்கிறது. ஒருபக்கம் சின்னச் சின்ன நகைச்சுவைகள் மறுபுறம் ஆக்சன் என நல்ல பட்ஜெட் இருந்தால் அசத்தலான மேக்கிங் திரைப்படங்களைக் கொடுக்க முடியும் என லோகா மூலம் மீண்டும் உறுதிசெய்துள்ளது மலையாளத் திரையுலகம்.

முக்கியமாக, சந்திரா யார் என்கிற தொன்மக் கதையை உருவாக்கியிருந்த விதம் ஆர்வத்தை அளித்தது. ஏலியன்களால், மின்னல்களால், பூச்சிகளால் சூப்பர்ஹீரோவான கதைகளிலிருந்து, ஒரு காரணத்திற்காக சந்திரா உருமாறிய கதை காட்சியமைப்புகளால் காத்திரமாக இருக்கிறது. ஆனால், சில காட்சிகள் இப்படித்தான் என சரியாக ஊகிக்க வைக்கின்றன. மேக்கிங் நன்றாக இருந்தாலும் ஒரே இடத்திலான கதை கொஞ்சம் சோர்வைத் தருகிறது. குறிப்பாக, உடல் உறுப்புகளைத் திருடும் கும்பல் குறித்தும் காவல்துறைக்கும் அவர்களுக்கு இடையான தொடர்பு குறித்தும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை.

கல்யாணி பிரியதர்ஷனை அழகான நாயகியாகப் பார்த்து திடீரென மிரட்டலான தோற்றத்தில் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் தோற்றம். எத்தனை பேரை அவர் அடித்தாலும் நம்ப முடிவதை தன் உடல்மொழியில் சுலபமாகக் கடத்துகிறார். இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளில் கதாபாத்திரத்தின் மீதான அவரது ஈடுபாடு நன்றாகத் தெரிகிறது.

நடிகர்கள் நஸ்லன், சந்து உள்ளிட்டோர் கதைக்கு ஏற்ப நல்ல பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். நடன இயக்குநர் சாண்டி இப்படத்தில் காவல்துறையைச் சேர்ந்த வில்லனாக நன்றாக நடித்திருக்கிறார். லியோ படத்திற்குப் பின் கவனம்பெறும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வில்லனுக்கான உடல்மொழியும் குரலும் இருப்பதால் தமிழ் சினிமாவில் பெரிய வில்லன் கதாபாத்திரங்களுக்கு சாண்டி சரியாக இருப்பார்.

லோகா படம் முழுவதும் தொழில்நுட்பத்தை நம்பியே உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைத்தன்மைக்கு ஏற்ப பெரும்பாலும் இரவுகளில்தான் கதை நகர்கிறது. அதற்காக, சிவப்பு வெளிச்சமிட்ட கட்டடங்கள், அறைகள் என ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளியமைப்புகள் பிரமாதமாக இருந்தன. கிளைமேக்ஸ் காட்சியில் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதமும் நன்றாக இருந்தது.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையே படத்திற்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. கல்யாணி மற்றும் சிறப்பு தோற்றங்களில் வரும் பிரபலங்களின் ஆடைகள் கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான திரைப்படம் என்பதால் மலையாள ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் பான் இந்திய ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. முக்கியமாக தமிழகத்திலும் லோகாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம், ஆஹோ ஓஹோ என்கிற அளவுக்கான திரைப்படமாகவும் லோகா இல்லை. சுவாரஸ்யமான சூப்பர்ஹீரோ திரைப்படம் என்கிற அளவிலேயே நின்றுவிட்டது.

இதையும் படிக்க: லோகா: நல்ல விமர்சனங்களால் கூடுதல் திரைகள் ஒதுக்கீடு!

actor kalyani priyadharshan starring lokah chandra chapter - 1 movie review

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... ஹிருதயபூர்வம் பற்றி மாளவிகா!

ஹிருதயபூர்வம் படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தன் மீது பொழிந்துவரும் அன்பிற்கு நன்றி தெரிவித்து நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார். சத்யன் அந்திகாட் இயக... மேலும் பார்க்க

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் படப்பிட... மேலும் பார்க்க

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்தை, தமிழகத்தில் இன்பன் உதயநிதி தலைமையில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகின்றது. நடிகர் தனுஷ் இயக்கி அவர் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்... மேலும் பார்க்க