எம்.எஸ்.தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் இப்படி நினைப்பது சரியா? அம்பத்தி ராயுடு சொல்வதென்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வெற்றி பெறும் முனைப்பில் இரண்டு அணிகளும் களமிறங்குகின்றன.
ரசிகர்கள் எதிர்பார்ப்பது சரியா?
இந்த ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காக மற்ற பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் நினைப்பது அணிக்கு சிறப்பான விஷயமாக இருக்காது என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீங்கள் புதிய வீரராக இருந்தால், உங்களால் ரசிகர்களை கையாள்வது மிகவும் கடினமாக இருக்கும். எம்.எஸ்.தோனி களமிறங்குவதற்காக ரசிகர்களின் ஆரவாரம் மிகவும் அதிகமாக இருக்கும். எம்.எஸ்.தோனிக்கு ரசிகர்களிடத்தில் இருக்கும் ஆதரவு நம்பமுடியாத அளவுக்கு இருக்கும். திடலுக்குள் பேட்டிங் செய்ய நுழையும்போது இந்த ரசிகர்கள் அனைவரும் சிஎஸ்கே ரசிகர்கள் என்பதற்கு முன்பாக எஸ்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர்கள் என்பதை உணர்வீர்கள்.
இதையும் படிக்க: இந்தியாவிலேயே மிகவும் பிடித்தது சேப்பாக்கம் திடல்தான்: தோனி
அவர்கள் அனைவரும் முதலில் எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர்கள் என்பதுதான் உண்மை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே எம்.எஸ்.தோனியை தல தோனி என ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். ரசிகர்களைப் போன்றே வீரர்களுக்கும் எம்.எஸ்.தோனியை மிகவும் பிடிக்கும். ஆனால், எம்.எஸ்.தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காக மற்ற பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் நினைப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது.
நேர்மையாக கூறவேண்டுமென்றால், அவ்வாறு ரசிகர்கள் நினைப்பது அணிக்கு நல்லதல்ல. வீரர்கள் அனைவரும் அணியின் வெற்றிக்காக தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர் என்றார்.