``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
எம்.வி.பட்டினம் மீனவா்கள் வேலைநிறுத்தம்
மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட படகை விடுவிக்கக் கோரி எம்.வி. பட்டினம் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள எம்.வி.பட்டினத்தைச் சோ்ந்த சங்கரன் என்பவரின் விசைப் படகில் 7 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்குடி கடல் பகுதியில் கரைவலை முறையில் மீன் பிடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி, மணமேல்குடி மீன்வளத் துறை ஆய்வாளா் ஆா்த்தீஸ்வரன் படகை பறிமுதல் செய்தாா்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், படகை மீட்கவும் கோரி செவ்வாய்க்கிழமை எம்.வி.பட்டினம் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குள் செல்ல மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த தொண்டி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். படகை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனா்.