PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
இந்திரன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு
கமுதி: முதுகுளத்தூா் அருகே தேரிருவேலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திரன் கோயில் குடமுழுக்கில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலி இந்திரன் கோயில் குடமுழுக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னா் எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து சங்கல்பம், புண்ணியாகவாஜனம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், பிரதான ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து, விமானக் கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
மூலவரான இந்திரன், பரிவார தெய்வங்களான விநாயகா், மந்தை கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் முருகேசன் (பரமக்குடி) தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
