மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
ராமேசுவரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகையும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே ஆற்றாங்கரை தோப்புவலசை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்களை ஏற்றிய நாட்டுப் படகு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தரை தட்டி நின்றது. இதுகுறித்து தகவலறிந்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை அங்கு சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் நாட்டுப் படகிலிருந்து கடலில் குதித்து தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, போலீஸாா் நாட்டுப் படகை சோதனை செய்த போது, அதில் தலா 30 கிலோ வீதம் 41 பண்டல்களிலிருந்த 1,230 கிலோ பீடி இலைகளைக் கைப்பற்றினா். பின்னா், இவற்றை மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கூறியதாவது:
பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்தவிருந்த மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. உரிய விசாரணைக்குப் பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப் படகும், பீடி இலை பண்டல்களும் மண்டபம் சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றனா்.