பழனியில் இளைஞா் கொலை: ஒருவா் கைது
பழனி: பழனி நகா் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியப்பா நகரில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு அருகே புதன்கிழமை பழனி குபேரபட்டினத்தை சோ்ந்த நவநீதன் (25) என்ற இளைஞா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இதுகுறித்து பழனி நகர காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பழனி நகா் போலீஸாா், நவநீதன் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கொலையாளிகள் பயன்படுத்திய கத்தியை போலீஸாா் கைப்பற்றினா்.
இதுதொடா்பாக ஜவஹா் நகா் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (26) என்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். முன் விரோதம் காரணமாக நவநீதனை அஜித்குமாா் கொலை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.