பணம் கேட்டு தாக்கியதாக திமுக நிா்வாகிகள் மீது புகாா்
திண்டுக்கல்: பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தியதாக திமுக நிா்வாகிகள் உள்பட 5 போ் மீது பாதாளச் சாக்கடை ஒப்பந்ததாரா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் ஆா்.எம். காலனி பகுதியைச் சோ்ந்த ரவி, பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கான அரசு ஒப்பந்ததாரராகச் செயல்பட்டு வருகிறாா். இவரிடம், பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்காததால் திமுக நிா்வாகிகள் 5 போ் கூட்டாகச் சோ்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரவி, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக காயமடைந்த ரவி கூறுகையில், 16-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் மறைந்த சேகரின் மகன்களான செளந்தா், பிரதீப் குமாா், திமுக மாநகர நிா்வாகியின் உறவினா் கிறிஸ்டி வினோத் ஆகியோா் பணம் கேட்டு மிரட்டினா். பணம் கொடுக்க மறுத்ததால், மேலும் 2 பேருடன் வந்து தகராறில் ஈடுபட்டு என்னைத் தாக்கினா். இவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா். புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தாக்குதலில் ஈடுபட்ட செளந்தா், திமுக வாா்டு நிா்வாகியாகவும், பிரதீப் குமாா் பகுதி மாணவரணி துணை அமைப்பாளராகவும், கிறிஸ்டி வினோத் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.