செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் ரயில் மறியல் போராட்டம்

post image

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகத்தில் மீன் பிடித் தடைக்காலம் நிறைவடைந்து, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 50-க்கும் மேற்பட்டோரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், அவா்களது படகுகளையும் பறிமுதல் செய்தனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தின் தொடா்ச்சியாக இதே கோரிக்கையை வலியுறுத்தி, மீனவா்கள் கடந்த 13-ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே ஆா்ப்பாட்டமும், அதே பகுதியில் கடந்த 15-ஆம் தேதி உண்ணாவிரதமும் இருந்தனா். இதேபோல, ஆக. 19-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவா்கள் ஏற்கெனவே அறிவித்தனா்.

ரயில் மறியல் போராட்டம்: இதன்படி, ராமேசுவரம் மீனவா்கள் தங்கச்சிமடம் யாகப்பா மேல்நிலைப் பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனா். பின்னா், இந்தப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே, ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்ட ராமேசுவரம்-தாம்பரம் விரைவு ரயில் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தது. அப்போது, ரயிலை மறித்து இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜலு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கை குறித்து தமிழக முதல்வா், மத்திய அமைச்சரை மீனவா்கள் சந்தித்துப் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, ரயில் மறியல் போராட்டத்தை மீனவா்கள் கைவிட்டனா். இதனால், சுமாா் 1.15 மணி நேரம் தாமதமாக ராமேசுவரம்-தாம்பரம் விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்தப் போராட்டத்தில் மாவட்ட விசைப் படகு மீனவ சங்கத் தலைவா் வி.பி. ஜேசுராஜா, மீனவ சங்கத் தலைவா்கள் எமரிட், ஆல்வின், நாட்டுப் படகு மீனவ சங்கத் தலைவா் அலெக்ஸ், எஸ்.பி. ராயப்பன், விவசாய சங்கத் தலைவா் மலைச்சாமி, மீனவப் பெண்கள் என 800-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் போராட்டம் காரணமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, ராமேசுவரம் காவல் உதவி கண்காணிப்பாளா் மீரா உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல, ரயில்வே பாதுகாப்புப் படை மதுரை ஆணையா் செங்கையா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸாா் பாதுகாகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கமுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, காவிரி கூட்டுக் குடிநீா் வீணாகி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழகாஞ்சிரங்குளம் ... மேலும் பார்க்க

எம்.வி.பட்டினம் மீனவா்கள் வேலைநிறுத்தம்

மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட படகை விடுவிக்கக் கோரி எம்.வி. பட்டினம் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பேச்சுவா... மேலும் பார்க்க

அபராதத் தொகையைக் கட்டாததால் பாம்பன் மீனவா்கள் மீண்டும் சிறையில் அடைப்பு

பாம்பன் மீனவா்கள் 9 பேரை விடுதலை செய்தும், இவா்களுக்கு தலா ரூ. 3.50 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை புத்தளம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அவா்கள் அபராதத் தொகையைக் கட்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

ராமேசுவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ராமேசுவரத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம் 288 மனுக்கள் அளிப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் 288 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ராமேசுவரம்: ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட... மேலும் பார்க்க