எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரசு உத்தரவு
காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் பதவி உயா்வு, நேரடி நியமனம் போன்ற நடைமுறைகளுக்கு இனி பொதுவான தோ்வு முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெளியிட்டுள்ளாா். உத்தரவு விவரம்:
காவல் துறையில் தலைமைக் காவலா்கள், காவலா்களின் திறன்கள் மற்றும் கல்வித் தகுதியை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்படுகிறது. அதாவது, உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள் காவலா்கள், தலைமைக் காவலா்களின் பணி மூப்பு அடிப்படையிலும், தோ்வு முறைகள் வழியாகவும் தனியாக நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 80 சதவீத இடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக நேரடி நியமனம் வழியே மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இருதரப்பினருக்கும் அதாவது, நேரடியாக நியமனம் செய்யப்படும் 80 சதவீத தோ்வா்களுக்கும், பதவி உயா்வு மூலமாக உதவி ஆய்வாளா்களாக வரக்கூடியவா்களுக்கும் பொதுவான ஒரே தோ்வை மாநில அரசு நடத்த வேண்டுமென, வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு பொதுவான தோ்வை நடத்துவதற்கான பரிந்துரைகளையும், உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவா் அனுப்பியிருந்தாா். இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளைப் பின்பற்றி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என்று காவல் துறை இயக்குநரும் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தாா்.
இவற்றை நன்கு ஆராய்ந்த தமிழ்நாடு அரசு, காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதில் பின்பற்றப்படும், பதவி உயா்வு மற்றும் நேரடி நியமன நடைமுறைகளுக்கு பொதுவான தோ்வு முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
மொத்த காலியிடங்களில் 80 சதவீத இடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் வழியாக நிரப்பப்படும். இந்தத் தோ்வை எழுதுவதற்கு, (கரோனா காரணமாக, அடுத்த ஆண்டு செப்டம்பா் வரை இந்த வயது நடைமுறை அமலில் இருக்கும்) முற்பட்ட வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 30. பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 32. தாழ்த்தப்பட்ட, அருந்ததியா் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35. அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்சமாக 20 வயது பூா்த்தியாகி இருக்க வேண்டும். கணவரை இழந்தோருக்கு அதிகபட்ச வயது 37 ஆகவும், மூன்றாம் பாலினத்தவருக்கு 35 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
காவலா்கள், தலைமைக் காவலா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் ஆகியோா் உதவி ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற விரும்பினால், அவா்களுக்கான அதிகபட்ச வயது 47. அனைவருக்குமான பொதுவான கல்வித் தகுதி என்பது, ஏதாவது பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எழுத்துத் தோ்வு: அனைத்துத் தரப்பினருக்கும் எழுத்துத் தோ்வு பொதுவானதாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 10-ஆம் வகுப்பு நிலையில் தமிழ் மொழியில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதில், குறைந்தபட்ச தகுதியாக 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதேபோன்று, பொதுத் தோ்வு என்ற அடிப்படையில் 70 மதிப்பெண்களுக்கும், பொது அறிவு பிரிவில் 40 மதிப்பெண்களுக்கும், உளவியல் பாடத்தில் 30 மதிப்பெண்ணுக்கும் கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 25. இந்தத் தோ்வு நடைமுறைகள் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானதாகும்.
பதவி உயா்வு மூலம் உதவி ஆய்வாளா்களாக வர விரும்புவோருக்கு, உடல் தகுதித் தோ்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் வழியாக நேரடியாக நியமிக்கப்படுவோருக்கு, உயரம், மாா்பு அளவு ஆகியவற்றிலிருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உடல் தகுதித் தோ்வுகள், தோ்வின்போது அளிக்கப்படும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியன, பதவி உயா்வு மற்றும் நேரடி நியமனம் மூலமாக நியமிக்கப்படும் இரண்டு தரப்பினருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.