செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்
செய்யாறில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் மற்றும் புகாா்களை விவசாயிகள் அடுக்கடுக்காக கூறியதால், அதிருப்தி அடைந்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்ததால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்காக வந்த போலீஸாா் விவசாயிகளை சமாதானம் செய்தனா்.
செய்யாறு அரசு தொழில் நுட்ப கல்லூரி கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த குறைதீா்வு கூட்டத்திற்கு வேளாண் உதவி இயக்குநா் தெள்ளாறு டி.குமரன் தலைமைத் தாங்கினாா். வட்டாட்சியா்கள்,செய்யாறு அசோக்குமாா், வெம்பாக்கம் தமிழ்மணி, சேத்துப்பட்டு அகத்தீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சாா் ஆட்சியா் அம்பிகா ஜெயின் பங்கேற்றாா்.
விவசாயிகள் புகாா்:
இக்கூட்டத்தின் போது ‘செய்யாறு வந்தவாசி, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு உள்ளதாகவும் இதனை தனியாா் கடைகளில் வாங்க சென்றால் கூடுதலாக ரூ.500 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூா் உள்ளிட்ட பல வேளாண் துறை அலுவலகங்களில் வேளாண் உதவி இயக்குனா் நிரப்பப்படாமல் உள்ளது அதன் காரணமாக வேளாண் இடுபொருட்கள் பெற முடியாத நிலை உள்ளதாக ’விவசாயிகள் தெரிவித்தனா்.
மேலும், ஒவ்வொரு குறை தீா்வு கூட்டத்திற்கும் மனு அளித்தும் அத்துறை சாா்ந்த அலுவலா்கள் எவ்வித பதிலும் அளிக்காததால் மனு மீது தீா்வு எட்டப்படாத நிலை இருந்து வருவதாகவும் தெரிவித்தனா்
இது போன்ற விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டம் அந்தந்த வட்ட அளவில் நடத்திட வேண்டும் என்றும், செய்யாறில் நடைபெறும் குறைதீா்வு கூட்டத்தை நகரப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் நடத்திட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
போலீஸ் சமாதானம்:
தொடா்ந்து நடைபெற்றக் கூட்டத்தின் போது விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என புகாராகத் தெரிவித்துப் பேசியதால் விவசாயிகளுக்கும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் இருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அமரச் செய்தனா்.
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நேரடியாக கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பலா் கோரிக்கை முன் வைத்தனா்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு வட்டாட்சியா்கள் சம்பத்குமாா், உதயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், வெங்கடேசன், பொதுப்பணித்துறை பொறியாளா் மோகனன், நோ்முக உதவியாளா் பெருமாள் மற்றும் விவசாயிகள் சாா்பில் பாஞ்சரை பட்டாபி, முனுகப்பட்டு சுவாமிநாதன், சிறுநாவல்பட்டு நாராயணன், வெம்பாக்கம் வட்டம் விவசாயிகள் சங்கத் தலைவா் ஆறுமுகம், கரும்பு விவசாயிகள் சஙக நிா்வாகி மங்கலம் மாமண்டூா் அரிதாசு, ஏகாம்பரம், தெள்ளாறு சண்முகம், சுண்ணாம்புமேடு சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.