நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு
நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது அதிகாரபூா்வ இல்லத்தில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்வதற்கு 146 எம்.பி.க்களின் கையொப்பத்துடன் கூடிய நோட்டீஸ், மக்களவையில் அண்மையில் ஏற்கப்பட்டது. இதையடுத்து, வா்மா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் குழுவை அமைத்து, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டாா்.
இதனிடையே, நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, பட்டய கணக்காளா் ஒருவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரா் முதலில் அரசையோ அல்லது காவல் துறையையோ அணுகவில்லை என்று குறிப்பிட்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, மனுதாரா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்ற விசாரணைக் குழு கடந்த மே மாதம் அறிக்கை சமா்ப்பித்தது. அதன்படி, அவரை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா் என்பது குறிப்பிடத்தக்கது.